×

பணமதிப்பிழப்பால் கிடைத்த நன்மை என்ன? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ‘மோடி அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன?’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பணமதிப்பிழப்பு பற்றி பிரதமர் அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் அனைவரும் வங்கிகள் முன்பு நின்றனர். இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பணமதிப்பிழப்பால் அடைந்த நன்மை என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதமாக கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சரிந்துள்ளது. ஏழை மக்களின் நலன் பற்றி சிந்திக்காத, திட்டமிடாத ஊரடங்கால் இந்த மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு காரணமாக ஏழை மக்கள் தங்கள் பாக்கெட்டிலும், வீட்டிலும் வைத்திருந்த சேமிப்பை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்தனர். அதன் வழியாக கோடீஸ்வரர்களுக்கான பெரும் கடனை வாராக்கடனாக அரசு மாற்றியது. இறுதியில் பணமதிப்பிழப்பால் கோடீஸ்வரர்கள் ஆதாயம் அடைய, ஏழைகளே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு, அரசுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பணமே இல்லாத பொருளாதாரம்
தனது பதிவில் ராகுல் மேலும், ‘மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா? அதனால், ஏழை மக்கள் பயன் அடைந்து உள்ளார்களா? காகிதம் இல்லா பொருளாதாரத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்பினார். ஆனால், தற்போது அது பணமே இல்லாத பொருளாதாரமாக மாறிவிட்டது,’ என கூறியுள்ளார்.

Tags : Rahul Gandhi , What is the benefit of inflation? Question by Rahul Gandhi
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...